பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின்படி சென்னை மாகாணத்தின் பெரும் பகுதிகளையும், அண்டை மாநிலங்களின் சில பகுதிகளையும் இணைத்து தமிழ்நாடு என்றழைக்கப்படும் இன்றைய நிலப்பரப்பு 1956-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி இதே நாளில் தான் உருவாக்கப்பட்டது. அதைக் குறிக்கும் வகையில் 70-ஆம் ஆண்டு தமிழ்நாடு நாளைக் கொண்டாடும் தமிழ்நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு நாள் எது என்பதிலேயே குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு வந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் வலியுறுத்தலை ஏற்று நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதே நல்லத் தொடக்கம் தான். இனி தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லதே நடக்கும்.
மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதில் நாம் இழந்த நிலப்பரப்பை விட, அதன் பிறகு நாம் இழந்த உரிமைகள் அதிகம். சகோதர மாநிலங்கள் என்று நாம் உறவு கொண்டாடினாலும் கூட அவற்றிடம் நாம் ஆற்று நீர் உரிமைகளை இழந்திருக்கிறோம். அண்டை நாடுகளிடம் கச்சத்தீவு உள்ளிட்ட உரிமைகளை இழந்திருக்கிறோம். சமூகநீதியை பாதுகாப்பதற்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகள் கூட கடந்த காலங்களில் பயன்படுத்தப்படாமல் போனது.
தமிழ்நாட்டின் உயிர்மூச்சுக் கொள்கை சமூகநீதி தான்; தமிழ்நாட்டின் இன்றையத் தேவை வளர்ச்சி தான். இந்த இரண்டும் தனித்தனியானவை அல்ல. இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை தான். அதனால் சமூகநீதி உள்ளிட்ட தமிழகம் இழந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்கவும், அதன் வாயிலாக தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைப்பதற்காகவும் கடுமையாக உழைக்க தமிழ்நாடு நாளான இன்று அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




