மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு! 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறவுள்ள நிலையில், அதற்கு ‘முரசு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்தியைக் கேட்க
AI குரல் வடிவம்
0:00 –:–

வங்கக்கடலில் உருவானது ‘முரசு’ புயல்!

கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 31- ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து, இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அதன்பிறகு புயலாகவும் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

இந்தப் புயலுக்கு ‘முரசு’ (Murasu) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 2-ஆம் தேதி மாலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் கேரளா – கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் இருந்து தெற்கு மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழை?

இதன் காரணமாக தமிழ்நாட்டில் நவம்பர் 1-ஆம் தேதியான இன்று வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், ஏனைய தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மாலை 4 மணி வரை 6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!

அதன்படி, இன்று பிற்பகல் 4 மணி வரை தமிழகத்தின், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.