தமிழ்நாடு காங்கிரஸின் அடுத்த தலைவர் தொடர்பாக கே.எஸ்.அழகிரி தகவல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி தேர்தல் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை நடந்தது. தேர்தல் எவ்வாறு நடத்துவது என்பது குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் வருகிற 10 ம் தேதி நடைபெறவுள்ளது. 15 லட்சத்திற்கும் மேல் வாக்காளர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் அடுத்த மாநில தலைவர் ஒரு பெண்ணாக இருக்கலாம்” என்று விளக்கினார்.காங்கிரஸ் கட்சி இடதுசாரிகள் பக்கமும் நிற்காது, வலதுசாரிகள் பக்கமும் நிற்காது இயல்பான கொள்கைகள் கொண்டே பயணிக்கிறது என்ற அவர், “விரைவில் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி அமையும். கூட்டணிக் கட்சியான திமுக சிறப்பாக செயல்படுகிறது. எனவே அவர்களை பாராட்டுகிறோம்” என்றும் குறிப்பிட்டார்.
மேலும், “இலங்கையில் பொருளாதார சீர்குலைவுக்கு காரணம் அந்த நாட்டில் சுய சார்பு இல்லாமல் அனைத்துக்கும் பிற நாடுகளை சார்ந்து இருந்ததுதான், நம் நாட்டில் அதுபோன்ற ஒரு நிலை ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில், இங்கு நேரு காலத்திலேயே நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் சுய உற்பத்தி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது” என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
Advertisement: