ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட 13 வீரர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நேற்று (டிச.08) கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் என மொத்தம் 13 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வீரர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் முப்படைகளின் தளபகளான, ஹரி குமார் (கடற்படை), நரவானே (ராணுவம்), வி.ஆர்.சவுத்ரி (விமானப்படை) ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
https://twitter.com/ANI/status/1468811385790369795
இவர்களைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அமைச்சர்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினர். மேலும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் என மற்ற உயர் அதிகாரிகளும் மரியாதை செலுத்தியுள்ளனர்.
செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர், “இந்த நாட்டிற்காக ஒவ்வொரு நொடியையும் முப்படைத் தலைமை தளபதி அர்ப்பணித்துள்ளார். அவரது இழப்பு பேரிழப்பாகும்.” என்று கூறினார். மேலும்,

“சிகிச்சை பெற்று வரும் வருண் சிங்கை சந்தித்தேன். அவர் குணமடைய பிரார்த்திருக்கிறேன்.” என்றும் கூறினார்.
வெல்லிங்டன் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண்சிங் பெங்களூருக்கு உயர்சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.








