தண்டோரா போடுவதை தடை செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்ப அது விவாதப் பொருளாக மாறியது. இந்த நிலையில் பல வருடங்களாக தண்டோரா மூலம் செய்திகளை அறிவித்து வரும் சேகர் என்பவரை நாம் சந்தித்தோம்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இப்போது போல அப்போது தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் புழக்கத்தில் இல்லை. ஒரு செய்தி கடைநிலை கிராமத்தைச் சென்று சேரவே ஒரு மாதம் கூட ஆகிவிடும். அந்த சமயத்தில் தண்டோரா மூலம்தான் அரசின் அறிவிப்புகளை மக்கள் தெரிந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திரா காந்தி இறப்பு செய்தியை மதுரை மாவட்டம் பனையூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் தனது 10 வயதில் தண்டோரா மூலம் கிராமத்து மக்களுக்கு தெரிவித்துள்ளார். அந்த காலத்தில், பெரும்பாலான செய்திகள் தண்டோரா மூலமாகவே தெரிவிக்கப்பட்டது.
தனது தண்டோரா அனுபவங்கள் குறித்து சேகர் கூறுகையில், “எனது தாத்தா தான் என்னை முதன் முதலாக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டுள்ளார். ஆகையால் இந்த தகவலை நீ தான் நமது கிராம மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென கூறினார். நான் அதை செய்யமாட்டேன் என்று மறுத்தேன். ஆனால் எனது தாத்தா ஊர் தலைவர்கள் மற்றும் எனது தாயார் முன்னிலையில் தண்டோராவைக் கொடுத்து இது உனது சீதனம் போன்றது” என்றார்.
அந்த நாள் முதல் இதுவரை கிராமத்தாருக்கு பல நல்ல செய்திகளையும், கெட்ட செய்திகளையும் அறிவித்துள்ளேன். கோவில் திருவிழா, வரிகள், அரசின் திட்டங்கள் மற்றும் இயற்கை பேரிடர் போன்ற பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளேன். சமூகத்தின் பிணைப்பு வலுவாக இருந்த காலத்தில் மக்களின் வீடுகளுக்கே செய்திகளைச் சேர்த்த கடைசி மனிதர்களுள் நானும் ஒருவன். கடந்த வியாழக்கிழமை அன்று தமிழக அரசு தண்டோரா இனி தேவையில்லை என்று அறிவித்தது. இனி வரும் காலங்களில் தண்டோரா சேவையை மக்களுக்கு வழங்கப் போவதில்லை என்பதை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று வருத்தமுடன் தெரிவித்தார்.
மேலும், இது நான் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த தொழிலாகும். எனது குருவாக எனது தாயார் இருந்தார். நான் சிறுவனாக இருந்த போது தாத்தாவுடன் தண்டோரா போட செல்வேன். அப்போது சில சமயங்களில் நானும் தண்டோரா போடுவேன். பள்ளி படிப்பிற்காக மதுரைக்கு சென்ற பிறகும் தண்டோரா மீதான காதல் அப்படியே இருந்தது. அரசின் தடை என்பது தண்டோராவின் முடிவைக் குறிக்காது. இப்போது கூட கோவில் அறிவிப்புகள் பல கிராமங்களில் வீடு வீடாக தண்டோரா இசைக்கப்படுகின்றன. தண்டோராவின் சத்தங்கள் மங்கிவிட்டாலும், அது எனக்கு எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும் என்று உருக்கமாக கூறினார்.
தனது தந்தையின் தொழில் குறித்து சேகரின் மகன் கூறுகையில், தற்போது காலம் மாறிவிட்டது, முன்பு போல் தண்டோரா வாசிப்பவர்களுக்கு மரியாதை இல்லை. ஆகையால், நாங்கள் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி போட்டிகளை நோக்கி நகர ஆரம்பித்துள்ளோம். ஆகஸ்ட் 5-ம் தேதி வெளியாகும் ‘குருதி ஆட்டம்’ படத்தில் நான் தண்டோரா வாசித்துள்ளேன் என்று கூறினார். தற்போது பறையை வாசித்து ஒரு முறை நடிப்பதற்கு ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை சம்பளம் வாங்குகிறோம். அதேசமயம், எனது அப்பா பல ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்திடமிருந்து ஒரு முறை வாசிப்பதற்கு ரூ. 500 ரூபாய் பெற்றார். அந்த பணத்தை அவருடன் வந்த எட்டு நபர்களுடன் பணத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.