தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்த தமிழக காவல்துறையின் மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலூரை சேர்ந்த 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக உயிரை மாய்த்து கொண்டார். இதையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. முன்னதாக இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாணவியின் தந்தை தாக்கல் செய்த பதில் மனுவுக்கு, விளக்க மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக கவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பீலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நிலை என்ன? என கேட்டனர். அதற்கு பதிலளித்த மாணவியின் தந்தை தரப்பு வழக்கறிஞர், விசாரணை நடத்து வருகிறது என தெரிவித்தார்.
இதையடுத்து தமிழக காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், தஞ்சை மாணவி விவகாரத்தை பொறுத்தமட்டில் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ வசம் ஒப்படைத்து விட்டோம். இருப்பினும் முன்னதாக இந்த வழக்கு இங்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக காவல்துறை மீது சில கருத்துக்களை உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
குறிப்பாக இந்த விவகாரத்தை “பிரஸ்டீஜ் விவகாரமாக” எடுத்துக்கொள்ளக் கூடாது என கருத்து கூறப்பட்டது, அந்த கருத்தை நீதிமன்றம் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட குழந்தைகள் உரிமைகள் நல பாதுகாப்பு ஆணையம் தரப்பு வழக்கறிஞர், தங்களது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையையும் பரிசீலித்து விசாரிக்க வேண்டும் என கோரினார்.
இதையடுத்து அனைத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,” இந்த வழக்கில் தேசிய
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு நல ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையை ஆய்வு செய்கிறோம். இதையடுத்து வழக்கை இறுதி விசாரணைக்காக பட்டியலிடவுள்ளோம் அன்றைய தினம் மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர் தரப்புக்கும் தலா 30 நிமிடங்கள் வழங்கப்படும். அதற்குள் வாதங்களை முன்வைக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வழக்கு மீதான விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.







