தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி. திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் தேர்வில் முன்னுரிமை வழங்குவதை உறுதி செய்திடக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்த 299 பொறியாளர்கள்
நியமிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியானது பல்வேறு தரப்பில் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்த 299 பேர் பொறியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதில், ஒன்றில் கூட தமிழரை நியமிக்காததாக என்.எல்.சி.யின் செயல் கடும் கண்டனத்திற்குரியது
என தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பிற மாநிலத்தவர் நியமிக்கப்பட்டது தமிழர்களிடையே கடும்
அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தொழில்
வளர்ச்சிக்காகவும், மின் தேவைக்காகவும் சுமார் 65 ஆண்டுக்கு முன்
என்.எல்.சி.க்கு ஏழை மக்கள் நிலம் வழங்கியவர்கள், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்ற உறுதிமொழியை என்.எல்.சி. நிறைவேற்றவில்லை எனவும், நிலம் கொடுத்தவர்கள் தற்காலிகப் பணியாளர்களாகவும், பிற மாநிலத்தவர்களை நிரந்தரப் பணியாளராக நியமிப்பது கண்டிக்கத்தக்கது எனவும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. இந்நிலையில், திறமையான மாணவர்கள் இருக்கிற தமிழ்நாட்டை முற்றிலுமாக என்.எல்.சி.புறக்கணித்துள்ளது நியாயமற்ற செயல் எனவும், மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து, பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் நவரத்னா பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி. திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் சிறப்புத் தேர்வின் மூலம் நியமிக்கப்பட வேண்டும் எனவும், கேட் (GATE) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சிப் பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் என்று 2022 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி தான் ஏற்கெனவே எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் பணிக்குத் தேர்வு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அழுத்தமான நியாயம் இருப்பதால், இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு விரைவில் சாதகமானதாக முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா








