தமிழ்நாட்டில் பயறு வகைகளின் பரப்பளவையும், உற்பத்தியையும் அதிகரித்திட பயறு பெருக்குத் திட்டம் வரும் நிதியாண்டில் 30 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பனை மேம்பாடு, சிறுதானி திருவிழா, விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு, பயிர்க்கடன் திட்டம், நம்மாழ்வார் விருது உள்ளிட்ட பல அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.
மேலும், தமிழ்நாட்டில் பயறு வகைகளின் பரப்பளவையும், உற்பத்தியையும் அதிகரித்திட பயறு பெருக்குத் திட்டம் வரும் நிதியாண்டில் 30 கோடி ரூபாயில் மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை உயர்த்திடும் நோக்கத்துடன், சூரியகாந்தி பயிரின் உற்பத்தித் திறனை உயர்த்தவும், அதிக இலாபம் தரக்கூடிய நிலக்கடலை, எள், சோயா மொச்சை போன்ற பயிர்களைப் பரவலாக்கம் செய்திடவும் வரும் நிதியாண்டில் 33 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், நிலக்கடலை, எள் போன்ற முக்கிய எண்ணெய் வித்துக்கள் அதிகம் விளையும் மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருவண்ணாமலை, தருமபுரி, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, கிருஷ்ணகிரி, கடலூர், திருப்பத்தூர், அரியலூர், வேலூர், புதுக்கோட்டை ஆகியவற்றை ஒருங்கிணைத்து எண்ணெய் வித்துக்கள் சிறப்பு மதிப்புக்கூட்டுதல், சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி ஆகியவற்றுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று கூறினார்.







