நடிகராக மாறிய இயக்குனர்கள் சினிமாவில் தங்களை நிலைநிறுத்திக்கொண்டார்களா ?

ஒரு திரைப்படத்தை இயக்குவதும் ஒரு குழந்தையை பெற்றெடுப்பதும் சமம் என்பார்கள். அப்படி தங்கள் கற்பனைகளால் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை பார்க்க 2 மணி நேரம் ரசிகர்களை திரையரங்கில் உட்கார வைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் பலர், தங்களை நல்ல…

ஒரு திரைப்படத்தை இயக்குவதும் ஒரு குழந்தையை பெற்றெடுப்பதும் சமம் என்பார்கள். அப்படி தங்கள் கற்பனைகளால் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை பார்க்க 2 மணி நேரம் ரசிகர்களை திரையரங்கில் உட்கார வைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் பலர், தங்களை நல்ல நடிகர்களாகவும் நிலை நிறுத்திக்கொண்டுள்ளனர். 


இயக்குனர் இமயம் பாரதிராஜா தொடங்கி கௌதம் வாசுதேவ் மேனன் வரை தங்களின் தனித்துவமான நடிப்பினால் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கான தனி இடத்தை தக்கவைத்துள்ளனர். 


1980 இல் வெளியான கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தன்னை ஒரு சிறந்த நடிகராக அறிமுகப்படுத்திக்கொண்டார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அதன் பிறகு பாண்டியநாடு, நம்ம வீட்டு பிள்ளை, ஈஸ்வரன் என 20 க்கும் மேற்பட்ட படங்களில் தன் நடிப்பு திறனால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். 
 

வாலி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எஸ் ஜே சூர்யா நியூ, ஸ்பைடர், மெர்சல் போன்ற படங்களின் மூலமாக தன்னை தவிர்க்க முடியாத நடிகராக மாற்றிக்கொண்டுள்ளார். இயக்குனராக பல வெற்றிப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்த பாக்கியராஜ், நடிகராகவும் நிலைத்து நிற்கிறார். சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தால் திரைப்படம், பாக்கியராஜிக்கு நல்ல வெற்றிப்படமாக அமைந்தது. 


பல தேசிய விருதுகளை பெற்ற பார்த்திபன், இயக்குனர் என்பதையும் தாண்டி ஒரு நடிகராக பட்டி தொட்டி எங்கும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். பார்த்திபன், வடிவேலு இணைந்து நடித்த வெற்றிக்கொடி கட்டு திரைப்படத்தின் நகைச்சுவை காட்சியை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. 


இந்த வரிசையில் தற்போது செல்வராகவனும் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் 19 ஆண்டுகளை கடந்துள்ள செல்வராகவன், துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை வெளியான போது பல சர்ச்சைகளை எதிர்கொண்ட செல்வராகவன், அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியுள்ளார். 

புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என பல வெற்றிப்படங்களை இயக்கிய செல்வராகவன், முதல் முறையாக நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். அருண் மாதேஷ்வரன் இயக்கும் சாணிக்காயிதம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பிறகு சாணிக்காயிதம் திரைப்படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்பு இந்த மாதம் மீண்டும் தொடங்க உள்ளது.  இயக்குனராக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற செல்வராகவன், நடிகராக தன்னை தக்கவைத்துக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

-தினேஷ் உதய்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.