நடிப்பைத் தவிர சைக்கிளிங் பயணத்தில் சாதனை படைத்து வரும் நடிகர் ஆர்யா, புதிய சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர் என்பது சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்ததே. தினந்தோறும் உடற்பயிற்சிக்கென குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நண்பர்களுடன் அதிகாலையிலேயே கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் சைக்கிளிங் சென்று வருவார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு, அடுத்த திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த நிலையில் தற்போது 400 கி.மீ சைக்கிளிங் பயணம் செய்துள்ளார் ஆர்யா.
இந்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் விவேக், “டியர் ஆர்யா… உங்களுடைய 400 கி.மீ சைக்கிளிங் பயணத்திற்கு வாழ்த்துக்கள். உடல்நலனின் கவனம் செலுத்தும் இளைஞர்களுக்கு முன் மாதிரியாக இருக்கிறீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு உங்களுடைய பயணம் மிகப்பெரிய உந்துதலாக அமையும்” என்று புகழ்ந்துள்ளார். இதற்கு ஆர்யா அளித்துள்ள பதிலில் என்றென்றும் மாறாத உங்களது அன்புக்கு நன்றி சார்…உங்களுடைய ஊக்கம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா காலத்தில் தினமும் சைக்கிளிங் சென்ற ஆர்யா அப்போது 100 கி.மீ தூரம் வரை பயணித்திருந்தார். சைக்கிளிங் செல்பவர்கள், ஜிம்முக்கு செல்பவர்களின் புகைப்படங்களையும், ட்விட்களையும் பகிர்ந்து அவர்களை தொடர்ந்து பாராட்டி வருகிறார்.







