இந்தியா – லீக்டென்ஸ்டைன் உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை; பிரதமர் மோடி – இளவரசர் அலோயிஸ் சந்திப்பு!

வர்த்தகம், தொழில்நுட்பம், நிதிச் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இந்தியா – லீக்டென்ஸ்டைன் இடையே ஆலோசனை நடைபெறுகிறது.

இந்தியாவுக்கும் லீக்டென்ஸ்டைன் நாட்டிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடியும் லீக்டென்ஸ்டைன் பட்டத்து இளவரசர் அலோயிஸும் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். லீக்டென்ஸ்டைன் பட்டத்து இளவரசர் அலோயிஸ், தனது மனைவி இளவரசி சோஃபியுடன் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் தளப் பதிவில், இந்தியா – லீக்டென்ஸ்டைன் இடையிலான இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தச் சந்திப்பு அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

முன்னதாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இளவரசர் அலோயிஸ் மற்றும் இளவரசி சோஃபியை வரவேற்றனர். இந்தியாவுக்கான தனது பயணம் குறித்துப் பேசிய இளவரசர் அலோயிஸ், லீக்டென்ஸ்டைன் நாட்டின் முதல் அரசுமுறைப் பயணம் இதுவெனக் குறிப்பிட்டார். இந்தியாவுடனான உறவுகளுக்கு தனது நாடு அளிக்கும் முக்கியத்துவத்தை இந்தப் பயணம் பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தியா மற்றும் ஐரோப்பிய தடையற்ற வர்த்தகக் கூட்டமைப்பு (EFTA) இடையே மேற்கொள்ளப்பட்ட வர்த்தக மற்றும் பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (TEPA), இரு தரப்பு உறவில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தம் 2025-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. புத்தாக்கம், மேம்பட்ட உற்பத்தித் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், கல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், ஏற்கெனவே ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மேலும் விரிவுபடுத்த விரும்புவதாகவும் இளவரசர் அலோயிஸ் தெரிவித்தார்.

இதற்கிடையே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இளவரசர் அலோயிஸைச் சந்தித்துப் பேசினார். இந்தியா – EFTA வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கியுள்ள வாய்ப்புகளின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இளவரசர் அலோயிஸ் மற்றும் இளவரசி சோஃபி ஆகியோர் டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அங்கு பார்வையாளர் பதிவேட்டிலும் கையெழுத்திட்டனர். மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரியும் அப்போது உடனிருந்தார். இளவரசர் அலோயிஸை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெயந்த் சௌத்ரி ஆகியோர் பின்னர் சந்திக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் இளவரசர் சந்திக்க உள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் விருந்தளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்று வதோதராவிலிருந்து டெல்லி வந்தடைந்த இளவரசர் அலோயிஸை விமான நிலையத்தில் ஜெயந்த் சௌத்ரி வரவேற்றார். அவருடன் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரும் இந்தியா வந்துள்ளனர். இந்தப் பயணம் இந்தியா – லீக்டென்ஸ்டைன் உறவுகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிப்பதுடன், புதிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே 1993-ஆம் ஆண்டு தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.

இதற்கு முன்னதாக, 2026 பிப்ரவரியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இளவரசர் அலோயிஸ் டெல்லி வந்திருந்தார். மேலும், 2010 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளிலும் அவர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போதைய பயணத்தை முடித்துக்கொண்டு அவர் நாளை இந்தியாவிலிருந்து புறப்பட உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.