ஆப்கனில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து படிக்க தடை?

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்க தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அமெரிக்க படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போர் அண்மையில் முடிவுக்கு வந்தது. அமெரிக்கா தனது…

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்க தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்க படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போர் அண்மையில் முடிவுக்கு வந்தது. அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெற்றுக்கொண்ட நிலையில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஷரியத் சட்டப்படி ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடைபெறும் என தலிபான்கள் கூறியுள்ளனர். இதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நோபல் பரிசு வென்றவரான மலாலா, ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலை குறித்த அச்சம் ஏற்பட்டிருப்பதாக கவலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் மாகாணத்தில், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்க தடை விதித்து தலிபான்கள் முதல் உத்தரவை பிறப்பித்துள்ளனர். பல்கலைக்கழக பேராசிரியர்கள், தனியார் நிறுவனங்களின் அதிபர்களை சந்தித்துப் பேசிய பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆண்களும், பெண்களும் ஒன்றாக சேர்ந்து படிப்பதே சமூகத்தின் அனைத்து தீமைகளுக்கும் வேராக இருப்பதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.