ஆப்கானிஸ்தானில் 150 இந்தியர்கள் கடத்தப்பட்டதாக வெளியான செய்தியை தலிபான்கள் மறுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கிருப்பவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயன்று வருகின்றனர். இதற்காக காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்து வருகின்றனர்.
வெளிநாடு தப்பிச் செல்ல முடியாதவர்கள், தங்கள் குழந்தைகளாவது நன்றாக இருக்கட்டும் என்று வெளிநாட்டுக்குச் செல்பவர்களிடம் அவர்களைக் கொடுக்கும் வீடியோ காட்சிகள், சில நாட்களுக்கு முன் பதைபதைப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் ருத்ரேந்திர டாண்டன் உள்பட 120 இந்தியர்கள், கடந்த செவ்வாய்க்கிழமை விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். இன்னும் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்கள், வணிகரீதியான விமான போக்குவரத்து தொடங்கிய பிறகு அழைத்து வரப்பட இருக்கிறார்கள்.
இதற்கிடையே, காபூல் விமான நிலையத்தில் கூடியிருந்த சுமார் 150 இந்தியர்களை தலிபான் கள் கடத்திவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆப்கான் மீடியாக்கள் வெளியிட்ட இந்த செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்தச் செய்தியை தலிபான்கள் மறுத்துள் ளனர்.
தலிபான் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான அஹமத்துல்லா வாசிக் (Ahmadullah Waseq), யாரையும் கடத்தவில்லை என்று மறுத்துள்ளார்.









