டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை, அக்டோபர் 17- ஆம் தேதி, அமிரகத்தில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. இருந்தாலும் இந்த போட்டியை அமீரகத்தில் நடத்துவதற்கான முதற்கட்ட பணிகளை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடங்கி விட்டது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்தப் போட்டிகள் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை, துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்திருப்பதாகவும், இதில் சில ஆட்டங்கள் ஓமனில் நடைபெறும் என்றும் கூறப்படுகின்றன.
ஏற்கனவே, தள்ளி வைக்கப்பட்ட எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகள், செப்டம்பர் 19- ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை அமீரகத்தில் நடத்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.







