டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குரூப்1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் சூப்பர்12 சுற்றில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மெல்போர்னில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் மோதும் டி20 உலக கோப்பை போட்டியை ரசிகர் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த போட்டிக்காக இரு அணியினரும் மெல்போர்னில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு உலக கோப்பை போட்டிக்காக முன்கூட்டியே ஆஸ்திரேலியா சென்று அங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்தியதுடன், பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய உத்வேகத்துடன் களம் இறங்குகிறது.
பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என்று பெரும் பட்டாளமே இருக்கிறது. சூர்யகுமார் அபார பார்மில் இருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமா விலகியது இந்திய அணிக்கு பின்னடைவு என்றாலும் அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அந்த இடத்தை நேர்த்தியாக நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்கும், சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஸ்வின், அக்ஷர் பட்டேலும் நல்ல நிலையில் உள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியை இந்தியா வெற்றிகரமாக கடந்து விட்டால் அதன் பிறகு அரைஇறுதியை எட்டுவது என்பது எளிதாகி விடும். கடந்த உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை விரைவில் வீழ்த்தியது பாதகமாக அமைந்தது. எனவே இந்திய அணியின் தொடக்க வீரர்கள் பொறுப்புடன் ஆட வேண்டியது அவசியமானதாகும். அத்துடன் பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியமானதாகும்.









