காமன்வெல்த் விளையாட்டில் வாள் வீச்சு போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற பவானி தேவி ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வெல்வேன் என சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.
லண்டனில் நடைபெற்ற காமன் வெல்த் வாள் வீச்சு சாம்பியன்ஸ் கோப்பையில் சென்னையைச் சேர்ந்த பவானி தேவி தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கமும், குழு பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றார்.
இந்த நிலையில் பவாணி தேவி இன்று டெல்லி வழியாக சென்னை விமான நிலையம் வனதடைந்தார். அவரை உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இதையடுத்துச் செய்தியாளர்களிடம் பேசிய பவானி தேவி கூறியதாவது:
நான் தனி நபர் பிரிவில் தங்க பதக்கமும், குழு பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளேன். நான் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்று உள்ளேன். காமன்வெல்த் வாள் வீச்சு போட்டியில் இந்தியாவுக்கு கிடைக்கின்ற முதல் தங்கப்பதக்கம் இது ஆகும். ஓய்வெடுக்காமல் தொடர்ந்து பயிற்சி பெற்றதால் பதக்கங்களை வெல்ல முடிந்தது.
இது இந்தியாவுக்கு பெருமையான ஒன்றாக நான் கருதுகிறேன். நான் பதக்கம் வெல்வதற்கு எனது பெற்றோர்களும், பயிற்சியாளர்களும் உறுதுணையாக இருந்தனர்.தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் எனக்கு உதவிகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் பணிபுரியும் மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ளவர்கள் நான் ஒவ்வொரு முறையும் போட்டிக்கு செல்லும் போது எனக்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் ஊக்கம் அளித்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றுகள் தொடங்க உள்ளன. தகுதி சுற்றில் வெற்றி பெற தமிழக அரசு தொடர்ந்து உதவி செய்ய வேண்டும்.
நிச்சயமாக ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வெல்வேன்.நாளை தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்துக்களை பெற உள்ளோம்.
வாள்வீச்சு போட்டிக்கு தமிழக அரசும் நிறைய உதவிகளை செய்து வருகின்றனர். அனைவருக்கும் தெரியக்கூடிய விளையாட்டாக தற்ப்போது உள்ளது. இந்தியாவில் அதிக அளவில் மகளிர்கள் வால் வீச்சு போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என பவானி தேவி தெரிவித்தார்.








