இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி வாகா எல்லையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. இதனால் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநிலங்களின் முக்கிய அலுவலகங்கள், தலைநகரங்களில் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
இந்த வருடம் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனால் இந்த ஆண்டை ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில் ஆண்டு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
சுதந்திர தினவிழாவையொட்டி இன்று காலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் தனது உரையில் இந்தியாவின் பன்முக தன்மை அதன் வலிமையாகும் என்றும், நம் நாடு ஜனநாயகத்தின் தாயகம் என்றும், சுதந்திரப் போராட்டத்தின் தியாகங்களின் வலிகளை நான் உணர்ந்துள்ளேன். எனது வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் இந்தியாவின் கடைசி குடிமகனுக்கும் அரசின் சலுகைகள் சென்று சேர வேண்டும் என்பது தான். அது தான் மகாத்மா காந்தி உடைய கனவான இருந்தது என்றும் கூறினார்.
இந்த நிலையில், இந்தியாவின் 75வது சுதந்திர தினமான இன்று பஞ்சாப்பில் உள்ள அட்டாரி – வாகா எல்லையில் அண்டை நாடான பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு, இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் இனிப்புகளை பரிமாறினர். ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி இன்முகத்துடன் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.







