நாம் பாகிஸ்தான் போல மாறிவிட கூடாது என்றால் ராணுவத்தையும், நாட்டு பற்றையும் அரசியலாக்க கூடாது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரை பகுதியில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 75-ஆவது சுதந்திர தின விழா சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். மேலும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அண்ணாநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், 107-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வி.கிரன் சர்மிலி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அமைச்சரை கோவில் நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்றனர். பின்னர் அவர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, கோவிலில் உணவு சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்தவர்களுக்கு அமைச்சர் உணவு பரிமாறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தேச பற்றையோ, ராணுவத்தையோ அரசியலில் இழுக்க கூடாது என்றார்.
மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு அழைப்பின் பேரில் பாடம் எடுக்க சென்றேன் என கூறிய அவர், தானும் ராணுவ பயிற்சி பள்ளியில் பயின்றவன் என நினைவு கூர்ந்தார். நாமும் பாகிஸ்தான் போல மாறிவிட கூடாது என்றால் ராணுவத்தையும், நாட்டுபற்றையும் அரசியலாக்க கூடாது என அமைச்சர் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








