தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கண்காணிப்பாளர் ரகளையில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை, மேற்குத் தாம்பரம் தர்காஸ் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று வாகனங்களின் 36 ஸ்மார்ட் கார்டுகள் காணாமல் போனது. இது குறித்து தகவல் அறிந்த தென் சென்னை போக்குவரத்து இணை ஆணையர் ஜெய்சங்கர் கடந்த வெள்ளிக்கிழமை அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அதன் பின்னர் கடந்த செவ்வாய்கிழமை அலுவலகத்திற்கு வந்த போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ் விசாரணைக்குப் பின்னர் கண்காணிப்பாளர்கள் பாலாஜி, காளத்தி, இளம் உதவியாளர்கள் சாந்தி, தாமோதரன் ஆகிய 5 பேரைத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தார்.
இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட கண்காணிப்பாளர் பாலாஜி நேற்று மாலை 6 மணியளவில் குடிபோதையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து அங்கு பணியிலிருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் போதை தலைக்கேற ஆத்திரமடைந்த அவர் அலுவலகத்தில் நுழைவு வாயிலிலிருந்த சிறிய கதவைக் காலால் எட்டி உதைத்து உடைத்து ஆக்ரோஷமாக வெளியே வந்து அலுவலகத்தின் பின்புறத்திலிருந்த கட்டையை எடுத்து வந்து கண்காணிப்பு கேமராக்களை உடைக்க முயன்றுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘இலவசங்களால் நாடு வளர்வதை நிதியமைச்சர் நிரூபிக்க முடியுமா? – சீமான்’
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவரை தடுக்க முயன்ற போது அவர்களைப் பிடித்துத் தள்ளிவிட்டு கட்டையால் கண்காணிப்பு கேமராவை தாக்கி சேதப்படுத்தியுள்ளார். பின்னர் அவரை கட்டுப்படுத்தி அலுவலக ஊழியர்கள் அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாகத் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சார்பில் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளைச் சேகரித்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.








