சேலம் அருகே கனிமவள கடத்தல் நடைபெற்று வருவதாக எழும் புகார்களை விசாரிக்காமல் இருப்பது காவல்துறையும் துணைபோவதாக தெரிவதாக கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சேலம் மாவட்டம் மாமாங்கம், செட்டிச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, வெள்ளைக் கற்கள் எனப்படும் கனிமம் கடத்தப்படுவதாக தொடர்ந்து பல்லாண்டுகளாகப் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்தில், இந்தக் கற்களைக் கடத்திய லாரியைப் பின்தொடர்ந்த ஊடகவியலாளர்களை, போலீசார் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ அதிர்ச்சியளிக்கிறது. கடத்தலைத் தடுக்க வேண்டியவர்களே, அதற்குத் துணைபோவது ஏற்புடையதல்ல என குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, காவல்துறை தலைமை இயக்குநர், சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சேலம் மாவட்ட ஆட்சியர், கனிம வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும் தலையிட்டு, கடத்தலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
கனிமவளக் கடத்தலை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுத்த ஊடகவியலாளர்களைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்திலும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துவதாகவும் கமல்ஹாசன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
– இரா.நம்பிராஜன்








