‘சூரரைப் போற்று படத்துக்கு வற்புறுத்தியது என் ஜோதிகா’ – மனம் திறந்த சூர்யா..!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சூர்யா நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 68வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று…

சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சூர்யா நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

68வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் விருதுகளை குவித்தது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைக்கதை விருதுகளை சூரரைப் போற்று பெற்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, சூர்யாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “வணக்கம்.. அன்பான வாழ்த்துகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள். சூரரைப் போற்று திரைப்படத்துக்கு ஐந்து தேசிய விருதுகள் கிடைத்திருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. பெருந்தொற்று காலத்தில், எதிர்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான இந்தத் திரைப்படத்துக்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது. தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்வைச் சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

தேசிய விருது பெறுகிற சுதா கொங்கரா – ஷாலினி உஷா நாயர், ஜி.வி. பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர், கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். சிறந்த படத்தைத் தயாரிக்க துணை நின்ற படக்குழுவினர் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் உரியது. மேலும், சிறந்த நடிகருக்கான இந்த விருதை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் சகோதரர் அஜய் தேவ்கன் அவர்களுக்கும், தேசிய விருது பெறுகிற இயக்குநர் வசந்த் சாய், ஶ்ரீகர் பிரசாத், லஷ்மி ப்ரியா சந்திரமௌலி, இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் 68வது தேசிய விருது பெறுகிற சக கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

நேருக்கு நேர் திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய் அவர்களுக்கும், தயாரிப்பாளர் இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பும், வழிகாட்டலும் தந்து எப்போதும் துணை நிற்கும் அம்மா, அப்பா, கார்த்தி, பிருந்தா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், சூரரைப் போற்று படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும், அன்பு பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோருக்கும் இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்.

என் முயற்சிகளை வரவேற்று கொண்டாடும் மக்களுக்கும் என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எப்போதும் உடனிருக்கும் அன்பு தம்பி – தங்கைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும், நன்றியும். இந்த தேசிய விருது அங்கீகாரம், நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது. தேர்வுக் குழுவுக்கும், இந்திய அரசிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். அன்பின் வாழ்த்துகளால் நெகிழச் செய்கிற அனைவருக்கும் மீண்டும் நன்றி.” என்று கூறியுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.