கள்ளக்குறிச்சி மாணவி உடலை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்து

நீதிமன்ற உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை பெற்று கொண்டு பெற்றோர்கள் சொந்த ஊருக்கு எடுத்து சென்றபோது, ஆம்புலன்ஸ் வாகனம் முன்னாள் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.   கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம்…

நீதிமன்ற உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை பெற்று கொண்டு பெற்றோர்கள் சொந்த ஊருக்கு எடுத்து சென்றபோது, ஆம்புலன்ஸ் வாகனம் முன்னாள் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில், கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அந்த மாணவி கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். உடனே மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

 

பின்னர் 14-ம் தேதி நடைபெற்ற பிரேதபரிசோதனையில், மாணவி இறப்பு சாதாரணமாக நிகழவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து, உறவினர்கள், மாணவர் அமைப்பு இணைந்து மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 17-ம் தேதி மிகப்பெரிய வன்முறையாக மாறியது. பின்னர் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு சென்றது.

இதனால் கடந்த 11 நாட்களாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்து மாணவியின் உடல், நீதிமன்ற உத்தரவுப்படி இன்று காலை மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திக், உள்ளிட்டோர் மருத்துவமனை வாளகத்தில் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அசம்பாவிதங்களை தடுக்க கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் இரண்டு ஐஜிகள் ஒரு டி ஐ ஜி, 6 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 2000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

மாணவி உடலுக்கு அவரது சொந்த ஊரான பெரிய நெசலூர் பகுதியில் இறுதிச் சடங்குகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவியின் உடலை பெற்று கொண்ட அவரது பெற்றோர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர். அப்போது, சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் தனக்கு முன்னால் சென்ற கார் நின்றதும், எதிர்பாராத விதமாக காரின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. சிறிய அளவிலான விபத்தே என்பதால் யாருக்கும் எதுவும் ஆகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

 

வழிநெடுக அதிவிரைவுப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட நிலையில், திடீரென விபத்து நேரிட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.