நீர்நிலைகளில் அபாயத்தை உணராமல் நீராடும் மக்களால், உயிர் பலிகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நியூஸ் 7 தமிழ் பிரமாண்ட கள ஆய்வை நடத்தியது.
கோடைக்காலம் தொடங்கியதில் இருந்தே தமிழ்நாடு முழுவதும் நீர் நிலைகளில் குழந்தைகள் குளிப்பதற்காக அதிகம் செல்வதைப் பார்க்க முடிகிறது. இதுபோன்ற சமயங்களில் பெற்றோர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கல் குவாரிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிக்க பொதுமக்கள் செல்லும்போது உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், வேலிகள் அமைப்பதன் மூலம் இந்த ஆபத்தை தவிர்க்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடலூர் மாவட்டம், குச்சிப்பாளையம் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளித்தபோது அண்மையில் 7 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் தந்தை பேசுகையில், தடுப்பணைக்காக ஆற்றில் மண் எடுத்து அதனை சரியாக மூடாததால் இந்த இழப்பு ஏற்பட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.
நீர்நிலைகளில் ஏற்படும் இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பேசிய தீயணைப்பு துறையின் வடசென்னை மாவட்ட அலுவலர் லோகநாதன், பள்ளிகளில் ஆசிரியர்கள் நீர் நிலைகளால் ஏற்படும் அபாயம் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நீர்நிலைகளால் ஏற்படும் ஆபத்தை குழந்தைகளிடம் உணர்த்துவதற்கும், என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை, மக்களிடமே நேரடியாக கேட்டு அரசின் கவனத்திற்கு கொண்டும் முயற்சியாக நியூஸ் 7 தமிழின் கள ஆய்வு அமைந்துள்ளது.








