திரையரங்கு ஊழியர்களிடம் வசூலித்த இ.எஸ்.ஐ. தொகையை செலுத்தாத வழக்கில் நடிகை ஜெயப்பிரதா 15 நாட்களில் சரணடைய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா சென்னை அண்ணா சாலையில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார். இந்த திரையரங்கில் பணிபுரிந்தவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ தொகையை அவர் தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் எழுந்தது.
இதை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், அவரது தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்தது.
இதையும் படியுங்கள் : ‘மார்க் ஆண்டனி’ பட விவகாரம் – நடிகர் விஷாலின் உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
இதை தொடர்ந்து, முதன்மை அமர்வு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயப்பிரதா மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்ததுடன், 15 நாட்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைந்து, இ.எஸ்.ஐ.க்கு செலுத்த வேண்டிய 20 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.







