சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் – எதிரியின் வீட்டிற்குள் புகுந்து அடித்த புதிய பாரதம் – நயினார் நாகேந்திரன்!

2016 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் – எதிரியின் வீட்டிற்குள் புகுந்து அடித்த புதிய பாரதம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “காலங்காலமாகப் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தாங்கிக்கொண்டு, வெறும் கண்டன அறிக்கைகளோடும் மெழுகுவர்த்தி அஞ்சலிகளோடும் நின்ற பலவீனமான அணுகுமுறையை ‘உரி’ தாக்குதலுக்குப் பிறகு சுக்குநூறாக உடைத்தெறிந்தார் பாரத பிரதமர் நரேந்திர மோடி, உலக நாடுகளின் அழுத்தங்களை துச்சமென மதித்து, “என் நாட்டு வீரர்களின் ரத்தத்திற்குப் பழிவாங்கும் நேரம் இது; எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி எதிரியை வேரறுங்கள்” என்று ராணுவத்திற்கு முழு ஆக்ரோஷ சுதந்திரத்தையும் தார்மீக பலத்தையும் வழங்கிய அவரது இரும்புத் தலைமை, இந்தியப் பாதுகாப்பு வரலாற்றையே புரட்டிப்போட்டது.

அந்தத் துணிச்சலான உத்தரவை ஏந்தி நள்ளிரவில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டிய ‘பாரா ஸ்பெஷல் ஃபோர்ஸ்’ கமாண்டோக்கள், எதிரியின் பயங்கரவாத முகாம்களைத் தரைமட்டமாக்கி 40-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை வேட்டையாடினர். நமது வீரர்களில் ஒருவருக்குக் கூட சிறு காயமின்றி கம்பீரமாகத் தாயகம் திரும்பி உலகையே அதிர வைத்தனர். “அத்துமீறினால் வீட்டிற்குள் புகுந்து அடிப்போம்” என நிரூபித்த இந்த சர்ஜிக்கல் தாக்குதல், பிரதமர் மோடி அவர்களின் தீர்க்கமான முடிவாலும் வீரர்களின் தீரத்தாலும் எழுதப்பட்ட புதிய பாரதத்தின் தன்மானப் புரட்சி”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.