அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நிறைவு..!!

காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நிறைவடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர்…

காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நிறைவடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை நிறைவடைந்ததையடுத்து, அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

செந்தில் பாலாஜியின் தரப்பில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்ட நிலையில் நீதிபதி அல்லி அனுமதி வழங்கினார். இதனையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்போடு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து வரப்பட்டார். காவேரி மருத்துவமனையில் ஏழாவது தளத்தில் ஸ்கை வியூ வார்டு (sky view ward) என்ற தனி அறை ஒதுக்கப்பட்டு அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்  அனஸ்தீசியா என்ற மயக்க கூசி செலுத்தப்பட்டது. இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ரகுராம் தலைமையில் இந்த அறுவை சிகிச்சை துவங்கி நடைபெற்றது.

செந்தில் பாலாஜியின் இதயத்திற்கு செல்லும் மூன்று ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்யும் விதமாக தொடர்ந்து மூன்று மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெறும் எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நிறைவடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.