சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழு படத்தின் மறு ஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.
13 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன்,சிஷ்டி டாங்கே, ரவி மரியா என நட்சத்திர பட்டாளமே நடித்து வந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.
லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். முதல் பாகத்தின் தொடர்பு இல்லாமல் உருவாகி வரும் இத்திரைப்படம் தெலுங்கில் வெளியான “நாகவள்ளி” திரைப்படத்தின் தழுவலாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்ததாக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.மேலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்டம்பர் 15-ம் தேதி படத்தை திரையரங்குகளில் வெளியிடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.







