துபாய் நாட்டிற்கு ஹோட்டல் வேலைக்கு சென்று அங்கு உடல்நலக்குறைவால் உயிருக்கு போராடும் கணவரை மீட்டு தர கோரி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே உள்ள மாணவநல்லூர் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் கடந்த ஓராண்டிற்கு முன்பு துபாய் நாட்டிற்கு வறுமையின் காரணமாக புரோட்டா மாஸ்டர் வேலைக்கு சென்றுள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அங்கு குமார் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்த எந்த விதமான முறையான தகவல்களையும் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகம் அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்காததால், குமார் தற்போது என்ன நிலையில் உள்ளார் என்பது தெரியவில்லை என குமாரி குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்தனர்.
இந்நிலையில் துபாய் நாட்டில் தனது கணவர் உயிருக்கு போராடி வருவதாகவும் அவரது தற்போதைய நிலையை அறியவும், அவரை பத்திரமாக தாயகம் அழைத்து வரவும் உதவி செய்ய வேண்டுமென அவரது மனைவி சித்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் மனு அளித்துள்ளனர்.
சௌம்யா.மோ







