திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதி – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதியளித்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் நயினார் நாகேந்திரன் வரவேற்றுள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக, திருப்பரங்குன்றத் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவே விடமாட்டோம் எனத் திமுகவும் தவெகவும் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளையும் முறியடிக்கும் வகையில், வரும் 24-ஆம் தேதி மகா கார்த்திகை தீபத் திருநாளன்று திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதியளித்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தலைவணங்கி வரவேற்கிறேன்.

பல ஆண்டுகளாக முருக பக்தர்களின் நெஞ்சங்களை அழுத்தி வந்த சோகமும், கோடிக்கணக்கான இந்துக்களின் கண்களில் குடிகொண்டிருந்த ஏக்கமும் இன்று பஞ்சாகப் பறந்து விட்டன! ‘மத நல்லிணக்கம்’ என்ற பெயரில் இந்துக்களின் அடையாளங்களை திட்டமிட்டு அழிக்கத் துடித்தவர்களின் சதித்திட்டங்களை தவிடுபொடியாக்கும் வகையில், மதவாத அரசியலின் மீது அடிக்கும் சம்மட்டி அடியாக வழங்கப்பட்ட இத்தீர்ப்பினை வாசித்த மறுநொடி எனது கண்கள் கலங்கிவிட்டன.

முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்காக கால் கட்டை விரல் தேய நீதிமன்றங்களின் படியேறி போராடிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், ஒரு அரசியல் தலைவராக அன்றி, எம்பெருமான் முருகனின் ஆஸ்தான பக்தனாக எனது கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

ஆயிரம் கரங்கள் தடுத்தாலும் , குன்றம் முழுவதும் குமரனுக்கே சொந்தம்!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீர வேல் முருகனுக்கு அரோகரா! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.