குறுவை, சம்பா பயிர்கள் பாதிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

குறுவை சாகுபடி பரப்பு சரிவு, சம்பா பயிர்களைக் காப்பாற்றத் தண்ணீர் தட்டுப்பாடு என விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி நீருரிமை மற்றும் விவசாயிகளுக்கான நிவாரணம் தொடர்பாக முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் தொடங்கி அக்டோபர் 12-ஆம் தேதி வரை கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில் 11 டி.எம்.சி பற்றாக்குறை இருப்பதாகவும், அந்த நீரை உடனடியாகத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதுபோல, நீர் பற்றாக்குறை நிலவும் ஆண்டுகளில் விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி இரண்டாவது இடைக்கால மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது. இந்த மனுக்களின் விசாரணை முடிவடைந்து இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, தமிழக அரசின் கோரிக்கைகளை நிராகரித்து மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதை குறிப்பிட்டு , காவிரியில் தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரைப் பெறுவதற்கான நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில்,

“குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்!

  • காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்?
  • பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்?
  • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது?
  • விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?

முதலமைச்சர் அவர்களே…

அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்! விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.