பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் டுர்பெட் நகரில் இருந்து நேற்று கராச்சி நகருக்கு ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இதனிடையே பலூசிஸ்தான் மாகாணம் குவாடர் மாவட்டம் பசால் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையில் எதிரே வந்த கியாஸ் டேங்கர் லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில்பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் தீயில் உடல்கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




