திரௌபதி முர்முவுக்கு பாமக ஆதரவளிக்கும்- அன்புமணி ராமதாஸ்

சமூக நீதியை காக்கும் கட்சியான பாமக பழங்குடியினத்தை சேர்ந்த பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  குடியரசு தலைவர் பதவிகாலம் முடிவடைய…

சமூக நீதியை காக்கும் கட்சியான பாமக பழங்குடியினத்தை சேர்ந்த பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

குடியரசு தலைவர் பதவிகாலம் முடிவடைய உள்ளதையடுத்து குடியரசு தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18ம் தேதி நடக்க உள்ளது. இதையடுத்து பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவதற்காக இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் நடந்த இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் ஏராளமான அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ், குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் அடித்தளம் சமூகநீதி தான். அதனால் தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவை முதன் முதலாக மருத்துவர் ராமதாஸ் அறிவித்தார்கள்.

திரௌபதி முர்மு பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர். அந்த இனத்தைச் சேர்ந்த ஒருவர் இந்திய வரலாற்றில் இப்போது தான் முதன்முறையாக குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்க உள்ளார். அடுத்து அவர் பெண்மணி. அந்த அடிப்படையில் தான் அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சி அதன் ஆதரவை வழங்கியது. பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் என்பதைக் கடந்து பொது வேட்பாளராக அனைவரும் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.