திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் இன்று நடைபெற்ற சுந்தரர்-பரவை நாச்சியார் திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருவாரூரில் உள்ள தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி சுவாதி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். முக்கிய நிகழ்வாக இந்த விழாவில் சுந்தர மூர்த்தி நாயனாருக்கும், பரவை நாச்சியாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சுவாதி விழாவில் சுந்தரர்-பரவை நாச்சியார் திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் முன்னதாக நிறைகுடம் கொடுத்து புதுத்தெரு நாலுகால் மண்டபத்திலிருந்து சுந்தரர் அழைத்து வரப்பட்டார். இதைத்தொடர்ந்து பரவை நாச்சியார் திருமாளிகையில் இருந்து புறப்பட்டு வந்தார். தொடர்ந்து தியாகராஜ சுவாமி முன்னிலையில் நம்பி ஆரூராருக்கும், பரவை நாச்சியாருக்கும் திருக்கல்யாணம் உற்சவம் சிறப்பாக நடந்தது.
பிற்பகல் 3 மணிக்கு பரவை நாச்சியாா் கோயிலில் சுந்தரருக்கும் பரவை நாச்சியாருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை நம்பி ஆரூரார் 63 நாயன்மார்களுடன் தேரோடும் வீதியில் நாதஸ்வர இசையுடன் வீதியுலா ஆகியவை நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.







