இமாச்சலபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இமாச்சலபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 68 இடங்களில், 40-ல் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக சுக்விந்தர் சிங் சுகு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இமாச்சலபிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு இன்று பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சிம்லாவில் நடைபெற்ற இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இமாச்சல் முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இமாச்சலப் பிரதேச முதல்வராக பதவியேற்றதற்கு மதிப்பிற்குரிய, சுக்விந்தர் சிங் சுகு அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடிமட்டத்தில் இருந்து முதல்வர் பதவிக்கு உயர்ந்துள்ள, உங்களது வளர்ச்சி உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. இமாச்சல பிரதேச மக்களுக்கு சேவை செய்வதில், உங்களது ஆட்சி வெற்றிகரமானதாக அமைய வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.







