மாநகர பேருந்து ஊழியர்களின் திடீர் ஸ்ட்ரைக் : மே 31ஆம் தேதி முத்தரப்பு பேச்சு வார்த்தை- சிஐடியு அறிவிப்பு

மாநகர பேருந்து ஊழியர்கள் நடத்திய திடீர் வேலை நிறுத்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  மே 31ஆம் தேதி முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக சிஐடியு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை அதிகமான…

மாநகர பேருந்து ஊழியர்கள் நடத்திய திடீர் வேலை நிறுத்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  மே 31ஆம் தேதி முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக சிஐடியு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை அதிகமான மக்கள் வசிக்கும் மாநகரமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு தொழில்களை முன்னிட்டும், பணிகளை முன்னிட்டும் ஏராளமானோர் போக்குவரத்துக்காக மாநகர பேருந்துகளை நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை திடீரென மாநகர பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. தனியார்மய நடவடிக்கையை கண்டித்து மாநகர போக்குவரத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இந்த திடீர் வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்டனர். ஓட்டுநர், நடத்துநர்களை தனியார் மூலம் நியமிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது.

இதனால் தி.நகர், மந்தைவெளி, ஆவடி உள்ளிட்ட பேருந்து பணிமனைகளுக்கு பேருந்துகள் திரும்பி வந்தவண்ணம் இருந்தன. வாரத்தின் முதல் நாளான இன்று, அதுவும் பரபரப்பான மாலை வேளையில்  சென்னையின் முக்கிய இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பணிகள் முடிந்து வீடு திரும்பும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

மாநகர பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் ஆட்டோக்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டினர். எனவே ஆட்டோ, கால் டாக்ஸி, ஷேர் ஆட்டோ, கேப் ஓட்டுநர்களும், உரிமையாளர்களும் விதிகளுக்கு உட்பட்டு கட்டணங்களை வசூலிக்குமாறு சென்னை மாநகர காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

இந்த அறிவிக்கப்படாத திடீர் வேலை நிறுத்தம் குறித்து  நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “பொதுமக்களின் நலன் கருதி பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளலாம். பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் நிலைமை சரிசெய்யப்படும்” என தெரிவித்தார்.

இந்த நிலையில் தொழிலாளர் நலத்துறையுடன் மே 31ஆம் தேதி முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக  சி ஐ டி யு தெரிவித்துள்ளது.  மேலும் தனியார் மூலம் ஓட்டுநர் நடத்துனர் நியமனம் குறித்து இந்த முத்தரப்பு பேச்சு வார்த்தை  அமையும் எனவும் சிஐடியு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.