முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

குலசையில் புதிய ராக்கெட் ஏவுதளம்: 99.9% நிலம் கையகப்படுத்தப்பட்டது – இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!

குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க 99.9% நிலம் கையகப்படுத்தபட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் ஜி.எஸ்.எல்.வி-எப் 12 ராக்கெட்டானது இந்திய நேரப்படி 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் 51.7 மீட்டர் உயரமும் 420 டன் உந்துவிசை எடையும் கொண்டது. ஜி.எஸ்.எல்.வி. வரிசையில் இது 15வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ராக்கெட்டின் மூலம் என்.வி.எஸ்-01 என்கிற 2232 கிலோ எடை கொண்ட வழிகாட்டும் வகை செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட நேவிகேஷன் செயற்கைக்கோளாகும். இதன் மூலம் இந்தியா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு நிலை, வேகம், இடம் மற்றும் நேர தகவலை துல்லியமாக வழங்க முடியும் என கூறப்படுகிறது.

இந்த செயற்கைக்கோள் மூலம் நிலத்திலும், கடற்பரப்பிலும் பயணிக்கும் இடத்தையும், தொலைவையும் மிக துல்லியமாக கணிக்க முடியும் எனவும், இதன்மூலம் இந்திய எல்லைக்கு அப்பால் 1500 கிலோமீட்டர் வரை கண்காணிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. மீனவர்கள் கடலுக்குள் எல்லைப்பகுதியை அறிந்துகொள்ளவும், அதேபோல் விவசாயிகளுக்கு நிலத்தின் தன்மையை அறிவதில் உதவும் வகையில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் புவிநிலைச் சுற்றுப்பாதையில் 18 நிமிடங்கள் 37 நொடிகளில் சென்றடைந்தது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், கூறியதாவது:

”என்.வி.எஸ்-01 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. கடைசியாக ராக்கெட் ஏவும் போது கிரயோஜெனிக் என்ஜினில் மற்றும் எரிபொருள் சேமிப்பு பகுதியில் பிரச்னை ஏற்பட்டது, அது இந்த முறை சரி செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளின் வழிகாட்டுமுறை மிகவும் துல்லியமானது. மேலும், இது போல் அடுத்தடுத்து 4 செயற்கை கோள்கள், விண்ணில் ஏவப்பட உள்ளது. சந்திராயன் செயற்கைக்கோள் விண்ணில் ஏவுவது பற்றி விரைவில் அறிவிக்கப்படும்.

ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு தேவையான பாராசூட், இருக்கை, மற்றும் பயணி அமைப்பு ஆகியவை சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் சோதனை ஏவும் திட்டம், ஜூலை அல்லது ஆகஸ்டில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், மனிதர்கள் இல்லாமல் ஏவும் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது.

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இது சிறிய அளவிலான ராக்கெட் ஏவுதளமாக செயல்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்த ஏவுதளம் எதிர்காலத்தில், வணிக ரீதியிலான தனியார் ராக்கெட் செலுத்துவதற்கு பயன்படும்.

இந்த ஏவுதளத்திற்கான 99.9% நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து விட்டன. இன்னும் சிறிய அளவிலான இடம் மட்டுமே கையகப்படுத்த வேண்டியுள்ளது. கட்டுமானப்பணிக்கான டெண்டர் விரைவில் அறிவிக்கப்படும். கட்டுமான வேலை தொடங்கினால், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளில் ஏவுதளம் செயல்பட தொடங்கும். இதுவரை 2000 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட்டுள்ளது”

என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram