அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் 2024ம் ஆண்டில் மட்டும் 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாகாணம் லாஸ் குரூசஸ் பகுதியில் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் கார் கண்காட்சி நடத்தப்பட்டது. இது சட்டவிரோதமாக நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கண்காட்சியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, திடீரென இரு குழுவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்விற்காக எடுத்துச்செல்லப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களில் இருவர் 19 வயதுடைய இளைஞர்கள் மற்றும் 16 வயது சிறுவன் ஒருவர் என போலீசார் தெரிவித்தனர். போலீசார் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








