திடீர் மழை; அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சேதம் 

பலத்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.  மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மாலை துவங்கி இரவு வரை கனமழை பெய்தது. மயிலாடுதுறை ,மணல்மேடு, செம்பனார்கோயில், சீர்காழி, குத்தாலம்…

பலத்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மாலை துவங்கி இரவு வரை கனமழை பெய்தது. மயிலாடுதுறை ,மணல்மேடு, செம்பனார்கோயில், சீர்காழி, குத்தாலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. அனைத்து பகுதிகளிலும் சராசரியாக 3 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில்  இந்த மழை காரணமாக வயல்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு காவிரியில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட்ட காரணத்தால் வழக்கமான பரப்பளவில் அதிக அளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. 67 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது.ஒரு சில இடங்களில் முற்றிய நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக முளப்பாக்கம், செறுதிறுயூர், நலத்துக்குடி ,கோடங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி உள்ளன. இதன் காரணமாக நெல் தரம் குறைவதுடன் அறுவடை இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்யும் பொழுது நெல்மணிகள் தரையில் சிதறி விளைச்சல் குறையும் என்றும் இயந்திரத்தின் வாடகை அதிகரிக்கும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர் .இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீட்டு திட்டம் தமிழக அரசு அறிவிக்காத நிலையில் நிவாரணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில் செலவு செய்த தொகை கூட கையில் கிடைக்காது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமன்றி கடந்த பருவத்தில் 180 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட ஆனால் இந்த ஆண்டிற்கு இதுவரை அரசு எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை. வெளி மார்க்கெட்டில் வியாபாரிகள் மிகக் குறைந்த விலைக்கு நெல்லை எடுத்துக் கொள்வதால் நெல் கொள்முதல் நிலையங்களில் காத்துக் கிடக்கும் விவசாயிகள் உடனடியாக கொள்முதல் நிலையங்கள் திறக்க அறிவிப்பை வெளியிட வேண்டும் என விவசாயி்கள் கோரிக்கை விடுத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.