சென்னை : வழக்கு பதியாமல் இருக்க ரூ.2 லட்சம் கேட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை

சென்னையில் நகைக்கடை மேலாளரை மிரட்டி பணம் கேட்ட வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ளது ARC காமாட்சி நகைக் கடை. அதில்…

சென்னையில் நகைக்கடை மேலாளரை மிரட்டி பணம் கேட்ட வழக்கில் பெண் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ளது ARC காமாட்சி நகைக் கடை. அதில் மேலாளராக சிவக்குமார் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நகைக் கடைக்கு கடந்த 10-ஆம் தேதி வந்த 2 காவலர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து வருவதாகவும், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரோகினி உங்களிடம்
விசாரணை நடத்த வேண்டும் என்றும் நகைக் கடையின் பொறுப்பாளர் வரவேண்டும் என கூறியுள்ளனர்.

 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு பெண் இந்த நகைக் கடையில் செயின், மோதிரம் வாங்கியுள்ளார். அவர் நேபாளத்தைச் சேர்ந்தவர். திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நகைக் கடையின் மேலாளர், வழக்கறிஞருடன் நுங்கம்பாக்கம் காவல்நிலையம் சென்றனர். நேபாளத்தைச் சேர்ந்த பெண் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உங்களிடம் நகைகள் வாங்கியுள்ளார் என காவல் ஆய்வாளர் ரோகிணி நகைக்கடை மேலாளரிடம் கூறியுள்ளார்.

 

திருட்டு வழக்கில் தொடர்புடைய பெண் வைத்திருந்த நகையில் உங்களது கடை முத்திரை இருந்த்தாகவும் காவல் ஆய்வாளர் ரோகிணி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வழக்குப் பதிவோம் என காவல் ஆய்வாளர் ரோகிணி கூறியதாக தெரிகிறது. பின்னர் அவர் கடைக்கு சென்றதும், இரண்டு காவலர்கள் சென்று வழக்கு பதிய வேண்டாம் என்றால் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் தரவேண்டும் என்றும், தங்கள் இருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதையடுத்து, பணம் கேட்டு தங்களது நகைக்கடையின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு செயல்படும் காவல் ஆய்வாளர் ரோகினி, மற்றும் காவலர்கள் எனக் கூறிக் கொள்ளும் அந்த இருவரை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 11-ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சிவக்குமார் புகார் கொடுத்தார்.

 

இந்த புகார் தொடர்பாக துறைரீயிலாக விசாரணைக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து நகைக்கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். காவல்துறை உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், நகைக்கடைக்கு வந்த போலீசார் மெல்வின் மற்றும்தங்கராஜ் என்பது தெரியவந்தது. 2 பேரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து கடந்த 12-ம் தேதியே காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

 

இதன் பிறகு காவல் ஆய்வாளர் ரோகிணியிடம் துறைரீதியிலான விசாரணை நடத்தப்பட்டது. பணம் கேட்டு மிரட்டியது உறுதியானதால் அவரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ரோகிணியை கஸ்துரிபாய் அரசு மருத்துவமனையின் புறக்காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.