சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளில் நீர் தேங்கி பெரிதும் பாதிப்படைந்த நிலையில் தற்போது போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் தொடங்கிய மழை அதிகாலை வரை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்தது. குறிப்பாக, அண்ணா சாலையில் நீண்ட தூரத்திற்கு முடங்கிய போக்குவரத்தால் மக்கள் அவரவரின் வீடுகளுக்கு திரும்ப இயலாமல் அவதிப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்நிலையில், ஓட்டேரி நியூ பேரண்ட்ஸ் சாலை அம்மா உணவகம் அருகே நடந்து சென்ற மூதாட்டி, தமிழரசி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதேபோன்று புளியந்தோப்பு அம்மையம்மாள் தெருவில் வசித்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மீனா என்பவர், இரும்பிலான கிரில் கேட்டை திறந்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். அதேபோல, மயிலாப்பூர் கார்னேஷ்வர் பகோடா தெருவை சேர்ந்த 13 வயது சிறுவன் லட்சுமணன், வீட்டிலிருந்த இரும்பு கிரில் கேட்டை திறந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கனமழையில் ஒரே நாளில் மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நல்லிரவு 2 மணி முதல் மழை ஓய்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. மழைநீர் தேங்கிய இடங்களில் நீரை வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகின்றன. மேலும், அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.