சென்னையில் கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக திடீரென தொடர் மழை பெய்து வருகின்ற நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை ஒய்ந்து பனிக்காலம் தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் தொடர்மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக 4 மணி நேரத்திற்கும் மேலாக அடைமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஒட்டிகள் அவதிபட்டு வருகின்றனர்.
இடியுடன் கூடிய மழையால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளது. பல முக்கிய சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. மட்டுமல்லாது வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மெட்ரோ இரயில்கள் சேவையில் பாதிப்பில்லாமல் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
அதேபோல விமான சேவை பாதிப்பில்லாமல் 10 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் பல இடங்களில் மிக கனமழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையின் தாக்கத்திலிருந்து சென்னை மக்கள் மெள்ள மீண்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் மழை அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.








