நீட் தேர்வை பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆதரிக்கும் போது, நீட்விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் எப்படி ஆதரவு தெரிவிப்பார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
போரூர் அடுத்த சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாம் தமிழர் கட்சியை பீ டீம் என அழைக்கும் திமுக, எதிர்க்கட்சியாக இருக்கும்போது பிரதமர் மோடியை எதிர்ப்பதையும், ஆளுங்கட்சியாக இருக்கும் போது வேறுமாதிரியான நிலைபாட்டை எடுப்பதாகவும் விமர்சித்தார்.
மேலும், நாம் தமிழர் கட்சியிலிருந்து ஆட்களை அனுப்பி, திமுகவை வளர்த்து வருவதாகவும் அவர் கேலி செய்தார். பா.ம.க.கூட்டணி அமைத்து வென்றால் அதற்கு வாழ்த்து கூறுவோம் எனவும் சீமான் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக தலைமையிலான மத்திய அரசு நீட் தேர்வை ஆதரிக்கும் போது, தமிழ்நாடு ஆளுநர் நீட்விலக்கு மசோதாவிற்கு ஆதரவு தெரிவிப்பார் என்பதை தம்மால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை எனவும் அவர் கூறினார்.







