தமிழ்நாட்டில் பல முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசலுக்கு ஏற்பட்டுள்ள திடீர் தட்டுப்பாடு வாகன பயன்பாட்டாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் இம்மாநிலங்களில் பல பகுதிகளில் பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள பெட்ரோலிய அமைச்சகம், நாட்டின் சில பகுதிகளில் பொதுத்துறை பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கடந்த சில நாட்களாக விற்பனை அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்கு 50 சதவிகிதம் அளவுக்கு கூடுதல் தேவை ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் விற்பனை நிலையங்களில் தாமதம், வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரம் அதிகரிப்பு போன்றவை நடந்து வருகின்றன. இது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் விநியோக தடைகள் பற்றிய யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. விவசாய நடவடிக்கைகள், மொத்தமாக வாங்குபவர்கள் தங்கள் கொள்முதலை பொதுத்துறை பெட்ரோல் பங்குகளுக்கு மாற்றியது போன்றவை காரணமாக இந்த தேவை அதிகரிப்பு நிகழ்ந்துள்ளதாக தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த தட்டுப்பாட்டை போக்க பொதுத்துறை பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களுக்கு கூடுதலாக பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் வேறு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு கட்டணங்கள் அதிகரிக்காததால் அரசு போக்குவரத்துக்கழகம் போன்ற மொத்தமாக வாங்குபவர்கள் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக வாங்குவதை விட பெட்ரோல் பம்புகளிலேயே நிரப்புவதே இத்தகைய தேவை அதிகரிப்பு காரணம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் இவ்வாறு இருக்க தமிழ்நாட்டில் தேனி, பெரியகுளம், கிருஷ்ணகிரி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எவ்வாறாயினும் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே வாகன பயன்பாட்டாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.








