கடலூர் முதுநகர் அருகே ஓட்டுநருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதியதில் ஒருவர் பலியானார், ஏழு பேர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு, அரசு பேருந்து ஒன்று கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. கடலூர் முதுநகர் அருகே உள்ள சேடப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, ஓட்டுநர் ராமுவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
அவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தறிகெட்டு ஓடியதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட்டனர். எதிரே வந்த டிராக்டர் மீது பேருந்து மோதியதில் டிராக்டர் ஓட்டுநர் விட்டல நாதன் காயமடைந்தார். தொடர்ந்து சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது பேருந்து மோதியதில் சுப்பராயன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த கடலூர் முதுநகர் போலீசார் காயமடைந்தவர்களையும், பேருந்து ஓட்டுநர் ராமுவையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான சுப்பராயன் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








