
பெண்கள் பயன்படுத்தும் இத்தகைய சானிட்டரி நாப்கின்களில் உள்ள ரசாயனங்களால் பெண்களின் கருப்பை பலவீனமடைவதோடு அதிகளவில் கருப்பையில் வலி ஏற்பட்டு உயர் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி கருவுறுவதில் சிக்கல், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல எதிர்விளைவுகள் இந்த நாப்கின்களில் உள்ள ரசாயனங்கள் ஏற்படுத்துகின்றன. நாப்கின்கள் குறித்த இந்த அறிக்கை வந்த பிறகு டேம்பூன்(Tampons) களை பயன்படுத்தலாம் என்றும் மென்சுரல் கப்களை பயன்படுத்தலாம் என்றும் அவை தான் மாற்று என்பது போன்ற பல பரிந்துரைகள் முன் வைக்கப்படுகின்றன.

2017 ம் ஆண்டு தென் கொரியாவில் பெண்கள் அமைப்புகள் ஒன்று சேர்ந்து நாப்கின்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது பெண்களின் சுகாதாரத்தை ,பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் பெண்களுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் முன்னணி நாப்கின் நிறுவனங்கள் தங்களது பொருட்களை சந்தையிலிருந்து திரும்பப் பெற்றன. சமீபத்தில் இந்தியாவில் டவ் ஷாம்பூ நிறுவனமானது அவர்கள் ஷாம்பூ தயாரிப்புகளில் உள்ள ரசாயனங்கள் புற்றுநோய் உண்டாக்க கூடியதாக உள்ளன என்று அந்நிறுவனம் சந்தைகளில் இருந்த தங்களது ஷாம்பூ பொருட்களை திரும்பப் பெற்றன. அதே போன்று இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள அல்லது சோதனைக்கு உட்படுத்திய நாப்கின் நிறுவனங்கள் தங்களது பொருட்களை சந்தையில் இருந்து திரும்ப பெறுவது தான் சரியானதாக இருக்கும் .

உலகம் முழுவதும் நாப்கின் போன்ற பெண்கள் சுகாதாரம் பேணும் பொருட்களின் தயாரிப்புகளுக்கான சட்டம் வலுவானதாக இல்லை . அமெரிக்காவில் உணவு மற்றும் ரசாயன கட்டுப்பாடு தர நிர்ணய நிறுவனம் இத்தகைய பொருட்களுக்கான சோதனை, கண்காணிப்பு கட்டாயமல்ல என்பதாக உள்ளது. பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் சீனாவில் தற்போது தான் கொஞ்சம் விதிகள் கடுமையாக்கப்பட்டு இத்தகைய தயாரிப்புகள் தொடர் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. ஐரோப்பிய யூனியன் மற்றும் தென் கொரியாவில் சட்ட ரீதியாக பல கட்டுப்பாடுகளை இத்தகைய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.



- சுகிதா சாரங்கராஜ்
இந்த கட்டுரை தொடர்பான வீடியோ செய்தி – சானிட்டரி நாப்கின் – புற்றுநோய் அபாயம்?






