முக்கியச் செய்திகள் கட்டுரைகள் செய்திகள் சினிமா

”பாபா” படம் மறுவெளியீடு செய்யப்படுவதற்கு இதுதான் காரணமா?


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

ஒரு படம் காலம் கடந்து நினைவுகூறப்படுவதற்கு மிக முக்கியமான காரணமாக அந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிதான் அமைந்திருக்கும். ஆனால் ஒரு தமிழ் படம்,  வெற்றியைத் தவிர மற்ற பல விஷயங்களால் 20 வருடங்களைக் கடந்தும் இன்றும் நினைவில் கூறப்பட்டுவருகிறது.  அதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ”பாபா”. 

பொதுவாக தமிழ் திரையுலகில் மைல்கல் வெற்றிகளை கொடுத்த படங்கள்தான் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன், சிவாஜி நடித்த கர்ணன், ரஜினி நடித்த பாட்ஷா என தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட வெற்றி படங்கள், பல பத்தாண்டுகள் கழித்தும் மீண்டும் வசூல் வேட்டை நிகழ்த்தியிருக்கின்றன.  இந்த விஷயத்தில் புதிய பார்முலாவாக ரீ ரிலீசுக்கு புத்தம் புது பொலிவுடன் தயாராகி வருகிறது பாபா திரைப்படம். தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரு  தோல்விப் படம் ஒன்று  மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. ரஜினியை பொருத்தவரை தமிழ் சினிமாவிற்கு இன்டஸ்ட்ரி ஹிட் ஏராளம் கொடுத்திருக்கிறார். தலைமுறைகளை தாண்டி வசூலில் பெஞ்ச் மார்க்குகளை நிர்ணயிக்கும் வசூல் சக்ரவர்த்தியாக ரஜினிகாந்த் வலம் வந்திருக்கிறார். ஆனால் பாபா படத்தை பொறுத்தவரை அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றம்தான்.  அந்த தோல்விப்படம்தான் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மெருகேற்றப்பட்டு விரைவில் வெள்ளித் திரையில் ரீ ரிலீசாக உள்ளது. தற்கால ரசிகர்களுக்கு ஏற்ப ரீ எடிட்டிங் செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் மறு வெளியீடு செய்யப்பட உள்ளது.  படத்தில் அப்போது ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கத்தவறிய பல்வேறு அம்சங்கள் தற்போது கொண்டாடப்படும் என்கிற நம்பிக்கையில் மறுவெளியீட்டிற்கு பாபா தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. 2002 தோல்வி அடைந்த பாபா திரைப்படம் 2022ல் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் பாபா படத்தின் பழைய நினைவுகளை உடனடியாக ரீவைண்டிங் செய்து பார்க்கலாம்.  மறுவெளியீடு என்றாலே அதில் முக்கியத்துவம் பெறுவது மலரும் நினைவுகள்தானே.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ரஜினியின் முடிவை மாற்றிய புத்தகம்

திரையுலகில் தனது வெள்ளிவிழா ஆண்டில் படையப்பா என்கிற வெள்ளிவிழா படத்தை கொடுத்த திருப்தியோடு சினிமாவிலிருந்து ஓய்வு பெற எண்ணியிருந்தார், மேலும் ஒரு 25 ஆண்டுகள் தனது சினிமா வாழ்க்கையில் நீடிக்கப்போகிறது என்று தெரியாமலிருந்த ரஜினி. படையப்பாவிற்கு பிறகு தனது ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்காவிட்டாலும் அடுத்தப்படத்திற்கான அறிவிப்பை ரஜினி வெளியிடாதது அவரது ஓய்வு முடிவையே சுட்டிக்காட்டியது. இந்த நிலையில் ஒரு புத்தகம் ரஜினியின் முடிவை மாற்றியது. பாபா படத்தில் வருவதுபோன்ற அமானுஷ்யம் தனது நிஜவாழ்விலும் நிகழ்ந்தது என்று அந்த புத்தகம்  குறித்து மெய்சிலிர்த்து மேடைகளில் கூறியிருக்கிறார் ரஜினி. படையப்பாவிற்கு பிறகு பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் ரஜினி ஓய்வில் இருந்த காலத்தில் ஒருநாள் மகா அவதார் பாபா குறித்த  புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த புத்தகத்தில் உள்ள போட்டோவிலிருந்து ஒளி ஒன்று கிளம்பி தனது உடலில் புகுந்தது போன்று உணர்ந்ததாகவும் அதன்பிறகு பாபா படத்தின் கதை சீன் பை சீன் யாரோ சொல்வது போல் மனதில் தோன்றியதாகவும் ரஜினி தனது ஆன்மீக அனுபவத்தை விழா ஒன்றில் பகிர்ந்தார். இந்த அதிசயம் தனக்குள் நிகழ்ந்த அன்றே தாம் சென்னை திரும்பி பாபா பட அறிவிப்பிற்கான வேளைகளில் ஈடுபட்டதாகவும் ரஜினி தெரிவித்தார்.

எதிர்பார்ப்பை எகிற வைத்த பாபா

தமிழ் திரையுலகில் வெளியீட்டிற்கு முன் அதிக எதிர்பார்ப்பை தூண்டிய படங்களில் பாபா ஒரு மைல்கல் என்றே கூறலாம். மெகா ஹிட் திரைப்படமான படையப்பாவிற்கு பின்னர் 3 ஆண்டுகளாக ரஜினியின் புதிய பட அறிவிப்பு வெளியாகாததால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருந்தனர். இந்நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பாபா படத்திற்கான அறிவிப்பை 2002ம் ஆண்டு வெளியிட்டார் ரஜினி. ”பூஜை போட்ட புண்ணியவானே” என போஸ்டர் அடித்து பாபா பட அறிவிப்பையே திருவிழா போல் கொண்டாடினர் ரஜினி ரசிகர்கள். பாபா பட அறிவிப்பு செய்தி மறுநாள் தினகரன் நாளிதழில் எட்டுக்கால தலைப்புச் செய்தியாக வந்தது. தமிழ் திரையுலகில் ஒரு படத்தின் அறிவிப்பு நாளிதழ் ஒன்றின் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டது அநோகமாக பாபா படத்திற்கு மட்டும்தான் இருக்கும். அண்ணாமலை, வீரா, பாட்ஷா ஆகிய மெகா ஹிட் திரைப்படங்களுக்கு பின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் ரஜினி மீண்டும் கைகோர்த்தது, ரஜினியே திரைக்கதை எழுதியது போன்றவற்றால் பாபா படத்திற்கான எதிர்பார்ப்பு  மேலும் மேலும் அதிகரித்தது. பிற்காலத்தில் ரஜினி கட்சியின் சின்னமா என்று விவாதிக்கப்பட்ட பாபா முத்திரை இந்த படத்திலிருந்துதான் பிரபலமானது. அந்த படத்தில் ரஜினி கட்டியிருக்கும் ஸ்டைலில் தலைப்பாகை கட்டிக்கொண்டு பாபா முத்திரையுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும் அளவிற்கு அந்த படம் வெளியீட்டிற்கு முன் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியிருந்தது. ரஜினிக்கு ஜோடியாக அப்போது இந்திப் பட உலகில் பிரபலமாக இருந்த மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். ரஜினியோடு படம் முழுவதும் வரும் வகையில் கவுண்டமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆன்மீகம்- அரசியல்

ரஜினி பிற்காலத்தில் பேசிய ஆன்மீக அரசியலைப் போல் பாபா படத்திலும் அதனைச் சார்ந்து அப்போது வெளிவந்த செய்திகளிலும் ஆன்மீகமும் அரசியலும் கலந்தேயிருந்தது. அண்ணாமலை படத்தில் தொடங்கிய ரஜினியின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பு பாபா படத்தின் வெளியீடு சமயத்தில் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது.  கதையோட்டத்தோடு ஒன்றியது என கூறினாலும் ரஜினி படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், வசனத்திலும் அரசியல் குறியீடு இருக்கிறதா என்றே ரசிகர்கள் ஆராய்வார்கள்.  ரஜினியால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்திருந்த காலத்தில் வந்த பாபா படத்தில் அரசியல் சமிக்ஞைகள் அதிகம் இருக்கும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.  ஆளுங்கட்சியின் அராஜகங்களை சாடுவது போலவும், நேர்மையான புதிய முதலமைச்சரை பதவியில் அமர்த்த ரஜினி பாடுபடுவதுபோலவும் ரஜினி ரசிகர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு தூபம்போடுவது போல படத்தின் கதையோட்டம் அமைந்திருந்தது. அதே நேரம் ”கட்சிகளை பதவிகளை நான் விரும்பமாட்டோன். ஆனால் காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்” என்கிற பாடல் வரிகள் ரசிகர்களை வழக்கம் போல் குழப்பின. ரஜினியின் தனிப்பட்ட வாழ்க்கையையும், கதையோட்டத்தையும் ஒரே புள்ளியில் கொண்டு வருவதுபோல் கவிஞர் வாலியும், வைரமுத்துவும் எழுதிய பாடல்கள்  படவெளியீட்டிற்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.   இந்த படத்தில் வரும் கவிஞர் வாலி எழுதிய ”ராஜ்யமா அல்லது இமயமா”  என்கிற பாடலில் இடம்பெற்ற ”அதிசயம் அதிசயம் பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி” என்கிற பாடல் வரிகளுக்கு திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த பாடல் வரிகளை நீக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என ரஜினிக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டது.

பாமகவுடன் மோதல்

பாபா படத்தை சூழ்ந்த சர்ச்சைகளில் பாமகவினருக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முக்கியமானது. பெங்களூருவில் நடிகர் ராஜ்குமார் மகன் படவிழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, வீரப்பன் குறித்து தெரிவித்த வார்த்தைகள் பாமகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் ரஜினியை கடுமையாக விமர்சித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியின் மாநாடு ஒன்றில் பேசிய வார்த்தைகள் ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க வைத்தன. இதனால் ரஜினி ரசிகர்களுக்கும் பாமகவினருக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்தன.  இந்த மோதல் பாபா படம் திரையிட்ட நாள் அன்று உச்சக்கட்டத்தை எட்டியது. ஜெயங்கொண்டத்தில் பாபா படத்தை வெளியிட்ட திரையரங்கின் திரை கிழிக்கப்பட்டது. ரஜினி ரசிகர்கள் வைத்திருந்த பேனர்கள், தோரணங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. படப்பெட்டி கடத்திச் செல்லப்பட்டது. பின்னர் சென்னையிலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வேறு ஒரு பாபா படப்பெட்டி கொண்டுவரப்பட்டு திரையிடப்பட்டது. இந்த பதற்றம் காரணமாக வடமாவட்டங்களில் பாபா படம் வெளியிடப்பட்ட  பல திரையரங்குகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

பாபா படத்தின் தோல்வி

ரஜினி மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் நடித்த பாபா படத்திற்கு இருந்த எதிர்ப்பார்ப்பை மனதில் வைத்து அந்த படத்தை அதிக விலைக்கு விநியோகஸ்தர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கியிருந்தனர். ஆனால் ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமையவில்லை. ரஜினி படத்திற்கே உரிய பொழுதுபோக்கு விஷயங்கள் குறைவாக இருந்தன. ஆன்மீக கருத்துக்களே மேலோங்கியிருந்தன. இதனால் படம் பெரிய தோல்வியை சந்தித்தது. பாமகவினர் ரஜினி ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நிலவிய பதற்றமும் இந்த தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. பாபா படத்தை வாங்கி நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத் தொகையை ரஜினி திருப்பிக் கொடுத்தார். அவரது இந்த நடவடிக்கை திரையுலகினரிடையே பெரும் பாராட்டுதலை பெற்றது. பின்பு நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து ரஜினி பேசும்போது “ஆற்றில் எடுத்ததை ஆற்றிலேயே போட்டுவிட்டேன்” என்றார். பாபா வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட படமல்ல என்றும் ஆன்மீக திருப்திக்காக எடுக்கப்பட்ட  படம் என்றும் ரஜினி விளக்கம் அளித்தார்.

சிகரெட் ஸ்டைல்

ரஜினியை திரையுலகில் அறிமுகப்படுத்தியது கே.பாலச்சந்தர் என்றாலும், அவரை ரசிகர்களிடையே பிரபலப்படுத்தியது சிகரெட் ஸ்டைல். சிகரெட்டை  ஸ்டைலாக தூக்கி போட்டு அதனை வாயில் பிடிக்கும் ரஜினியின் ஸ்டைல் கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை கலக்கியது. அந்த சிகரெட் ஸ்டைலுக்கு பாபா படம்தான் முற்றுபுள்ளி வைத்தது. ஆம்…ரஜினி கடைசியாக இது போன்ற ஸ்டைல் காட்டியது பாபா படத்தில்தான்.  ரஜினி  தமது திரைப்படங்களில் சிகரெட் பிடிப்பதால் இளைஞர்களும் புகைப்பிடிப்பதாக சர்ச்சை எழுந்தது. உச்ச நட்சத்திரமான ரஜினி, திரைப்படங்களில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என் பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. குறிப்பாக பாமக இந்த விவகாரத்தில் ரஜினியை கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதற்கு பாபா படத்தோடு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி. பாபா படத்திற்கு பின் வந்த சந்திரமுகி படத்தில் சிகரெட்டிற்கு பதில் சுவிங்கத்தை தூக்கிபோட்டு பிடித்து ஸ்டைல் காட்டினார். 2019ல் வெளியான பேட்டை படத்தில் ஒரே ஒரு காட்சியில் சிகரெட் பிடிப்பது போன்று ரஜினி நடித்தாலும்,  புகைப் பிடிப்பது உடலுக்கு நல்லதல்ல என்கிற விழிப்புணர்வு வசனத்தை சொல்வதற்காகவே அந்த காட்சி படத்தில் இடம்பெறுவது போல் காட்டப்பட்டிருக்கும்

பாபா தற்போது ரிலீஸ் செய்யப்படுவது ஏன்?

மறு வெளியீடு செய்வதற்கு ரஜினியின் மெகா ஹிட் திரைப்படங்கள் எத்தனையோ இருக்க பாபா படம் அதற்கு தேர்ந்தெடுக்கப்படுவது ஏன்? என்கிற கேள்வியும் பேசு பொருளாகியுள்ளது. தற்போது பேன்டசி மற்றும் அமானுஷ்ய அம்சங்கள் நிறைந்த படங்களுக்கு வரவேற்பு இருந்து வரும் நிலையில், பாபா படத்தில் உள்ள அந்த அம்சங்கள் ரசிகர்களை ஈர்க்கும் என்கிற எண்ணத்தில் அந்த படம் மறுவெளியீடு செய்யப்படலாம் என்கிற ஒரு கருத்து நிலவி வருகிறது. அதே நேரம் பாபா படம் மறு வெளியீடு செய்யப்படுவதற்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்குமா என்கிற கோணத்திலும் ஆராயப்படுகின்றன. ஆளுங்கட்சியினரை கடுமையாக விமர்சிக்கும் வகையில் பாபா படத்தில் பல காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆன்மீகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் அரசியல் வசனங்களும் பாபாவில் பொறி பறந்தன. ரஜினி படம் ஒன்றில் கடைசியாக அதிக அளவு அரசியல் வசனங்கள் இடம்பெற்ற படம் பாபாதான்.  “முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்”  ”கட்சிகளை, பதவிகளை நான் விரும்பமாட்டேன், காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்”என்பது உள்ளிட்ட பல்வேறு பாடல் வரிகளும் பாபா படத்தில் இடம்பெற்றிருந்தன. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ரஜினி முயற்சிப்பது போன்ற காட்சிகளும் அந்த படத்தில் இடம் பெற்றிருக்கும். தற்போது  ரஜினியை மீண்டும் அரசியலோடு தொடர்புபடுத்தி பேச்சுக்கள் எழுந்துள்ள சூழ்நிலையில்,  அந்த சூழலுக்கு வலுசேர்க்கும் வகையில் அரசியல் பரபரப்புகளை அதிகம் ஏற்படுத்திய பாபா படம் மறுவெளியீடு செய்யப்படுகிறதா என்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.

-எஸ்.இலட்சுமணன் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மும்பை டெஸ்ட்: நியூசி. அணிக்கு 540 ரன்கள் வெற்றி இலக்கு

Arivazhagan Chinnasamy

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு – 2 வாரங்கள் ஒத்திவைத்து உத்தரவு

EZHILARASAN D

பருவமழை காரணமாக, எகிறும் தக்காளி விலை

Halley Karthik