விசாரணை கைதி மரணம் – அடுத்தடுத்து கைதாகும் காவலர்கள்

சென்னையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவத்தில், 2 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.   சென்னை தலைமை செயலாக காவல்…

சென்னையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவத்தில், 2 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சென்னை தலைமை செயலாக காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ் என்பவர், மறுநாள் காலையில் மயக்க நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விக்னேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியதையடுத்து, இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தியது. மேலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் விசாரணை மேற்கொண்டது.

 

பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையில், விக்னேஷ் காவல் நிலையத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தலை, கை, கால் உள்ளிட்ட 13 உடலில் 13 இடங்களில் அவருக்கு பலத்த காயம் இருந்ததாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இதனால் இந்த வழக்கு தீவிரமடைந்தது.

 

இந்நிலையில், விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் தலைமை செயலக காவல் நிலைய எழுத்தர் முனாப் மற்றும் காவலர் பவுன்ராஜ் ஆகியோர் இன்று காலை கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து தற்போது, தலைமை காவலர் குமார், ஊர்காவல்படை காவலர், ஆயுதப்படை காவலர் உட்பட மேலும் 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

 

விக்னேஷ் காவல்நிலையத்தில் உயிரிழந்தது தொடர்பாக நேற்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தற்போது வரை 6 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.