நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் மே 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள டான் திரைப்படத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
இதில், டான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், நாம் நினைக்க மறந்த வெளிப்படுத்த முடியாத சில உணர்வுகளை இந்த படத்தில் வெளிப்படுத்தி உள்ளோம். அது மக்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன் என்றார்.
கால்லூரியில் தன்னை டானாக நினைக்கும் ஒருவனின் கதையை சொல்லும் கதையாக இது அமைந்துள்ளது என தெரிவித்த சிவகார்த்திகேயன், கொரோனா காலத்திற்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் தரும் ஆதரவுக்கு நன்றி என்றார். அந்த ஆதரவு டான் திரைப்படத்திற்கும் கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். டான் திரைப்படம் வருகிற 13-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால், சிவா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.







