சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியன் ப்ரீமியர் லீக் 2024 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதரபாத், பஞ்சாப், டெல்லி, குஜராத், லக்னோ ஆகிய 10 பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாய் சுதர்ஷன் – சுப்மன் கில் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். சாய் சுதர்ஷன் 103 ரன்களும், சுப்மன் கில் 104 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அஜிங்கியா ரஹானே, ரச்சின் ரவீந்திரா தலா 1 ரன்களுக்கு வெளியேற, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 0 ரன்களுக்கு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து கைகோர்த்த டேரில் மிட்செல் – மொயீன் அலி ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதையும் படியுங்கள் : சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேர சோதனை நிறைவு! கஞ்சா சிகரெட், பேங்க் பாஸ்புக் பறிமுதல்! வீட்டுக்கு சீல்!
டேரில் மிட்செல் 63 ரன்களும், மொயின் அலி 56 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்தடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 21 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த எம்.எஸ்.தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் விளாசினார். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.







