கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம் டி’ஓர் – கோல்டன் பாம் பிரிவில் தேர்வான ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படத்தின் இயக்குநர் பாயல் கபாடியா குறித்து காணலாம்…
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா, மே மாதம் 14 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. இந்த திரைப்பட விழாவின் பல்வேறு பிரிவுகளில் திரையிடப்படும் படங்கள் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டன. இதில் உலகின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்ட படங்கள் அடங்கும்.
இந்த விழாவில் மிகவும் மதிப்புமிக்க பிரிவாக கருதப்படும் பாம் டி’ஓர் – கோல்டன் பாம் பிரிவில், இந்திய இயக்குநர் பாயல் கபாடியாவின் முதல் முழு நீள திரைப்படமான ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டு ஷாஜி என்.கருண் இயக்கிய ஸ்வாஹாம் திரைப்படத்திற்கு பிறகு, சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் பாம் டி’ஓர் – கோல்டன் பாம் பிரிவில் தேர்வான இந்திய திரைப்படம் பாயல் கபாடியாவின் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’.
இத்திரைப்படம் பாயல் கபாடியாவின் முதல் திரைப்படம் மட்டுமல்ல. இது கேன்ஸ் திரைப்பட விழாவின் முதன்மையான பிரிவில் 3 தசாப்தங்களுக்கு பின்னர் தேர்வான இந்திய திரைப்படமும், அனைத்து பிரிவுகளில் இதுவரை தேர்வான பெண்களால் இயக்கப்பட்ட 4 திரைப்படங்களில் ஒன்றும் ஆகும்.
இதையும் படியுங்கள் : தடுமாறிய சிஎஸ்கே… – 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி!
இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் பட்டம் பெற்ற பாயல் கபாடியா, சினிமாவின் மூலம் ஒரு தனித்துவமான பார்வையை ஏற்படுத்தி வருகிறார். “கல்லூரியில் படிக்கும் போது எக்ஸ்பெரிமென்டா என்ற எக்ஸ்பரிமெண்டல் திரைப்படங்கள் இடம்பெற்ற திரைப்பட விழாவில் கலந்துகொண்டேன். அங்கு, நான் ஒரு புதிய வகையிலான படங்கள் குறித்து தெரிந்துகொண்டேன். இது சினிமா மீதான எனது பார்வையை முற்றிலும் மாற்றியது” என்று பாயல் கபாடியா தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர்,கேன்ஸ் மற்றும் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பாயல் கபாடியாவின் குறும்படங்கள், அவரது எல்லை கடந்த ஆர்வத்தை பறைசாற்றுகிறது. அவரது 2021 ஆவணப் படமான ‘எ நைட் ஆஃப் நோயிங் நத்திங்’ கேன்ஸ் திரைப்பட விழாவில் எல்’லோ டி’ஓர் (சிறந்த ஆவணப்படம்) விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.







